Monday, January 25, 2021

மணக்குடவர் திருக்குறள் உரையாசிரியர்

மணக்குடவர்-திருக்குறள் உரையாசிரியர்

(உரையாசிரியர்கள்மு.வை.அரவிந்தன் - திருக்குறள்உரையாசிரியர்கள்)

 திருக்குறள் உரைகளில், பரிமேலழகர் உரைக்கு அடுத்தபடியாக அச்சேறி மக்களிடத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்ற பெருமை, மணக்குடவர் உரைக்கு உண்டு. பரிமேலழகர் உரையை மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையையே நோக்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும்.

மணக்குடவருடைய உரை, தெள்ளிய தமிழில் எளிய நடையில் அமைந்துள்ளது. பொழிப்புரையும், சில இடங்களில் விளக்கமும் உள்ளன.

தமிழ்ப் பண்பாடு தழுவி எழுதப்பட்ட தெளிவுரை என்று இவரது உரையைப் போற்றுவர். பிற உரையாசிரியர்களைப்போல வட நூற்  கருத்தைத் தம் உரையில் புகுத்துவதில்லை. புதிய பாடங்களைக் கொண்டு. சொற்களைப் பிரிக்கும் முறையில் புதுமை கையாண்டு சிறப்பாக உரை எழுதிச் செல்வது இவரது பண்பாகும்.

இவரிடம் ஆரவாரமோ புலமைச் செருக்கோ காணப்படவில்லை. கற்று அறிந்து அடங்கிய அறிஞராக இவர் காணப்படுகின்றார். தமக்கு ஐயப்பாடாக உள்ள கருத்தினைத் தயக்கத்துடனே எழுதுகின்றார். வான்சிறப்பு என்ற அதிகாரத்திற்கு விளக்கம் எழுதும் இடத்தில், “இது கடவுட் செய்கைத்தாதலால் அதன்பின் கூறப்பட்டது. இஃது ஈண்டுக் கூறியது என்னை எனின், பின் உரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமும் இனிது நடப்பது மழை உண்டாயின் என்றற்குப் போலும், அன்றியும் காலத்தின் பொருட்டுக் கூறினார் எனினும் அமையும்’ என்று எழுதுவது இங்கே நினைக்கத்தக்கதாகும்.

மணக்குடவரைப்பற்றி அறிந்து கொள்ள, இவரது உரைக்கு முன்னால் உரைச் சிறப்புப்பாயிரம் எதுவும் இல்லை. ஆதலின் மற்ற உரையாசிரியர்களை அறிந்த அளவிற்கும் இவரைப்பற்றி அறிய இயலவில்லை.

மணக்குடி என்ற ஊரில் பிறந்து அவ்விடத்தில் வாழ்ந்ததால் மணக்குடியர் என்று பெயர் ஏற்பட்டு அப் பெயரே மணக்குடவர் என்று மருவிற்று. மணக்குடி என்ற பெயருடன் தமிழகத்தில் பல ஊர்கள் இருப்பதால் அவர் எப்பகுதியில் வாழ்ந்தார் என்றும் அறியமுடியவில்லை. மணக்குடி என்பது, இவர் பிறந்த குடியின் பெயர் என்றும் கூறுவர்.

திருக்குறள் உரையாசிரியர்களில் காலத்தால் முற்பட்டவர் இவர் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. ஆனால் இவரே பிறர்கொண்ட பாடங்களையும் மற்ற உரைகளையும் தம் உரையில் குறிப்பிடுவதால் இவருக்கு முன்னும் உரையாசிரியர் சிலர் இருந்திருக்க வேண்டும் என்று அறியலாம்.

சமயக் கருத்து

மணக்குடவர் உரையில் அவரது சமயத்தை அறியும் வகையில் சமயக் கருத்துக்கள் பல இடங்களில் உள்ளன.

‘ஆதிபகவன்’ (1) என்பதற்கு ஆதியாகிய பகவன் என்றும், ‘தன்னுயிர் தானறப் பெற்றானை’ என்ற குறளின் (268) விளக்கவுரையில், “உயிர் என்றது சலிப்பற்ற அறிவை; தான் என்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்காரம் அறுதல்” என்றும், ‘மலர் மீசை ஏகினான்’ என்பதற்கு (3) மலரின் மேல் நடந்தான் என்றும், ‘தாமரைக் கண்ணான் உலகு’ (1103) என்பதற்கு இந்திரனது சுவர்க்கம் என்றும் கூறுகின்றார்.

‘வகுத்தான் வகுத்த வகை’ (377) என்பதற்கு விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகை என்று பொருள் உரைக்கின்றார்.

 ‘இருள் நீங்கி இன்பம் பயக்கும்’ (352) என்ற குறளின் கீழ், “இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தி இன்பம் உண்டாமே என்றது” என்று கூறுகின்றார்.

‘எதிரதாக் காக்கும்’ (429) என்ற குறளின் உரையில் “இது, முன்னை வினையால் வரும் துன்பமும், முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராது என்றது” என்றும், ‘ஒருமைக்கண்’ (398) என்ற குறளின், “இது, வாசனை (வாசனாமலம்) தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்கும் என்றது” என்றும் உரைக்கின்றார்.

இக் கருத்துக்கள் யாவும், மணக்குடவர், சமண சமயத்தவர் என்பதை விளக்கும்.

உரையின் சிறப்பியல்புகள்

மணக்குடவர் உரையின் சிறப்பியல்புகள் கற்போரை மகிழச் செய்பவை. அவை, மணக்குடவரின் உரைத் திறனுக்குச் சான்று பகர்பவை.

இவரது உரை பொழிப்புரையாக உள்ளது; தேவையான இடங்களில் மிகச் சுருக்கமாக விளக்கம் எழுதுகின்றார். குறளின் கருத்து இது என்று கூறுகின்றார். திருக்குறள் இருக்கும் அமைப்பிலேயே பொருள் உரைக்கின்றார்.

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இவற்றை நன்கு ஆராய்ந்து முன்பின் மாற்றி அமைத்து, கொண்டு கூட்டிப் பொருள் எழுதுவதி்ல்லை.

 முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்                                                        காயினும் தான்முந் துறும்.              (707)   என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரையும் மணக்குடவர் உரையும் ஒப்பிட்டு நோக்கின் மணக்குடவர் குறள் கிடந்தவாறே பொருள் உரைப்பது புலனாகும்.

சில இடங்களில் தேவையான சொற்களை வருவித்து எழுதுதலும் உண்டு.    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்                                                                        தாளுளாள் தாமரையி னாள்                 (617)  என்ற குறளின் உரையில், மடியுளாள் மாமுகடி என்பதற்கு வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பி இருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவாள்” என்று சில சொற்களை வருவித்துப் பொருள் உரைக்கின்றார்.

 ‘பகல் வெல்லும் கூகையைக் காக்கை’ என்ற குறளின் (481) கீழ், “இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது” என்று குறளின் கருத்தைச் சுருக்கமாகச் சுட்டுகின்றார். இவ்வாறு குறளின் கருத்தை நூல்முழுதும் சுட்டிச் சொல்லுவது இவர் வழக்கம்.

உவமை விளக்கம் : திருவள்ளுவர் கூறிய உவமைகளை மிகச் சில இடங்களில் விளக்குகின்றார்.

‘ஏறுபோல் பீடு நடை’ என்பதில் உள்ள ஏறு நடை என்பதனை, ‘அசையும் தலையெடுப்பும் பொருந்திய நடை’ என்று விளக்குகின்றார். இந்த விளக்கம் மிகவும் அரியதாகும்.

‘நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை’ என்றும் குறளின் (802) விளக்கவுரையில், “இது பேய்ச் சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை உண்டாகாதது போல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாகலான் உடன்படல் வேண்டும் என்றது” என்று உவமை கூறி விளக்குகின்றார்.

மேற்கோள்: மிக அருகியே மேற்கோள்களை இவர் காட்டுகின்றார். ‘அரங்கின்றி வாட்டாடியற்றே’ என்ற குறளின் விளக்கவுரையில் (401) “கோட்டி கொளல், புல்லா எழுத்திற் பொருளில் வறுங்கோட்டி என்றாற்போல” என்று நாலடியாரை மேற்கோள் காட்டுகின்றார்.

      சொல்லாட்சி: மிகக் குறைவாக இவர் வடிசொற்களையும் வழக்குச் சொற்களையும் பயன்படுத்துகின்றார்.

     ‘கல்லா ஒருவன் தகைமை’ என்ற குறளின் (404) உரையில், “கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும் என்றவாறு” என்ற பகுதியில் ‘கிட்டி’ என்ற வழக்குச் சொல்லை ஆண்டுள்ளார்.

முரண் அகற்றுதல்

 பொருட்பாலில் உள்ள,

  அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்                                                         எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு               (392)   என்ற குறளும்,

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது                                                                  அஞ்சல் அறிவார் தொழில்                 (428)    என்ற குறளும் முரண்படுவதுபோலத் தோன்றுவதை அறிந்த மணக்குடவர், ‘அஞ்சுவது அஞ்சாமை’ (428) என்ற குறளின் உரையில், “மேல் அஞ்சாமை வேண்டும் என்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவு என்றார்” என்று கூறி முரண்பாட்டை நீக்குகின்றார்.

பரிமேலழகரும் மணக்குடவரும்

பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே, இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கின்றார்.

 அதிகாரந்தோறும் அமைந்துள்ள குறட்பாக்களை, கருத்து இயைபு நோக்கிப் பிரித்துப் பொருள்கூறும் முறையைப் பரிமேலழகர் மணக்குடவரிடமிருந்தே பெற்றுள்ளார்.

பல குறட்பாக்களின் உரையும் விளக்கமும்கூடப் பரிமேலழகர், மணக்குடவரைத் தழுவியே உரைக்கின்றார். ‘அறத்தாறு இதுவென’ என்ற குறளின் (37) விளக்கவுரையில் மணக்குடவர், “இது பொன்றினாலும் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று,”என்கிறார்.

பரிமேலழகர் அவர் கருத்தைத் தழுவி, “இதனாற் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது” என்று உரைக்கின்றார்.

‘செவிக்குணவு’ என்ற குறளின் (412) விளக்கவுரையில் மணக்குடவர், “பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்பும் ஆதலான் ‘சிறிது’ என்றார்” என்று கூறுகின்றார். பரிமேலழகர் அவர் கருத்தை மேற்கொண்டு “நோயும் காமமும் பெருகுதலால் ‘சிறிது’ என்றும் கூறினார்” என்று உரைக்கின்றார்.

‘உலகம் தழீஇயது’ என்ற குறளின் (425) உரையில் மணக்குடவர், “நீர்ப்பூப்போல மலர்தலும் குவிதலும் இன்றி, ஒரு தன்மையாகச் செலுத்துதல் அறிவு” என்று கூறுகிறார். பரிமேலழகர் அக்குறளின் விளக்கவுரையில், “கயப்பூப் போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையை நட்பாயினான் எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்” என்று மணக்குடவர் கருத்தைத் தழுவி எழுதுகின்றார்.

 வேறு சில இடங்களில் பரிமேலழகர், மணக்குடவரைப் பெரிதும் மதித்து, அவர் உரையையும் கருத்தையும் சுட்டிச் செல்லுகின்றார். அவர் கருத்துப் பொருந்தாக இடங்களைக் காரணங்கூறி மறுக்கின்றார்.

மணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரை ஆசிரியர்களுள் ஒருவர். இவர் மணக்குடி என்ற ஊரில் பிறந்தவர் என்றும் மணக்குடியர் என்பது பின்னாளில் மணக்குடவர் என்று மருவிற்று என்றும் கருதப்படுகிறது.


முப்பாலுக்குள் நாற்பால் காணும் முயற்சி

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், அப்பால்களுக்குள் நான்காவது பாலாக "வீடு" என்பதைக் காணும் முயற்சி பழைய உரையாசிரியர்களிடம் தெரிகிறது. இதைப் பரிமேலழகர் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,

புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...

என்று மணக்குடவர் விளக்குகிறார்.

அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்.

திருக்குறளைப் புருடார்த்த வரையறைக்குள் கொண்டு வருகின்ற பரிமேலழகர் கூற்று[3] யாவரும் அறிந்ததே:

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலில், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.

இப்பார்வை, திருவள்ளுவரை ஒரு "தெய்வ" நிலைக்கு உயர்த்தும் முயற்சி இருந்ததையே சுட்டுகிறது.

முப்பால்களில் இயல் பகுக்கும் முறையில் வேற்றுமை[தொகு]

திருக்குறளின் அடிப்படைப் பிரிவாகிய அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் பிரிவு முறை வள்ளுவராலேயே செய்யப்பட்டது என்று கொண்டாலும், அந்த மூன்று பால்களின் உட்பிரிவாகிய "இயல்"கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்னும் போது பழைய உரையாசிரியர்கள் நடுவில் கூட பல வேற்றுமைகள் உள்ளன.

மணக்குடவர் அறத்துப்பாலைப் பிரிக்கும் முறை

பண்டைய திருக்குறள் உரையாசிரியர்களுள் காலத்தால் முந்தியவரான மணக்குடவர் அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பகுத்துள்ளார்.

அதே முறையைப் பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் மற்றும் பரிமேலழகர் பின்பற்றுகின்றனர்.

இவ்வாறு அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்காகப் பகுத்துக் காணும் போக்கு மணக்குடவருக்கு முன் அல்லது அவரது காலத்தில் உருவாக்கம் பெற்றுவிட்டதைக் காண முடிகின்றது. இந்தப் பகுப்பை மணக்குடவரே உருவாக்கியிருக்கவும் கூடும். ஆனால் அதற்கான உறுதியான சான்றுகள் இல்லை.

பழைய உரையாசிரியர்கள் காலமான 300 ஆண்டுக் காலமும் இந்த மரபே தொடர்ந்துள்ளது. அதன் பின்னரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சுகாத்தியர் உரை வரும் வரையிலும் (1889) இந்த மரபே தொடர்ந்துள்ளது.

இங்கே பரிமேலழகர் ஒரு உட்பிரிவைப் புகுத்தியுள்ளார். அதாவது, அறப்பாலின் நான்காம் இயலாகிய துறவறவியலை இவர் விரதம், ஞானம் என இரண்டாகப் பகுத்துக் கொள்கிறார். இந்த மாற்றம் மற்ற பழைய உரையாசிரியர்களிடம் காணப்படாத ஒன்று ஆகும்.

மணக்குடவர் பொருட்பாலைப் பிரிக்கும் முறை

பொருட்பாலை மணக்குடவர் பின்வருமாறு பகுக்கின்றார்:

இயல் பெயர்அதிகாரங்கள் அமைப்பு
அரசியல்39 முதல் 63 முடிய
அமைச்சியல்64 முதல் 73 முடிய
பொருளியல்74 முதல் 78 முடிய
நட்பியல்79 முதல் 83 முடிய
துன்பவியல்84 முதல் 95 முடிய
குடியியல்96 முதல் 108 முடிய

இந்தப் பாகுபாட்டைப் பரிப்பெருமாள் அப்படியே பின்பற்றுகின்றார். ஆனால், காலிங்கள் இவர்களிலிருந்து மாறுபட்டு,

அரசியல் - 38 முதல் 63 அதிகாரங்கள்
அமைச்சியல் - 64 முதல் 108 அதிகாரங்கள்

என்று இரு இயல்களாக மட்டுமே பகுக்கின்றார். இவ்வாறு, பரிப்பெருமாள் அமைச்சியல் என்பதில் மணக்குடவர் சுட்டும் ஐந்து பகுப்புகளை ஒன்றாக்கிக் கொள்கின்றார்.

பரிமேலழகர் மேற்கூறிய இரண்டு பாகுபாட்டு முறைகளிலிருந்து வேறுபட்டுப் புதியதொரு பகுப்பு முறையை உண்டாக்கிக் கொள்கிறார். அப்பகுப்பு முறை வருமாறு:

இயல் பெயர்அதிகாரங்கள் அமைப்பு
அரசியல்39 முதல் 63 முடிய
அமைச்சியல் (அங்கவியல்)64 முதல் 95 முடிய
ஒழிபியல்96 முதல் 108 முடிய

மணக்குடவரின் பகுப்பு முறையிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் வேறுபடுகின்றார்கள் என்றாலும், அவர்கள் அதிகார வைப்பு முறைகளை மாற்றிவிடவில்லை. அதிகார வைப்பு முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு, பகுப்பதில் தான் வேறுபடுகின்றார்கள்.

இவர்களை அடுத்து வரும் திருவள்ளுவமாலைப் புலவர் போக்கியார், பொருட்பாலைப் பின்வருமாறு ஏழாகப் பகுப்பதைக் காண முடிகின்றது: அரசியல்
அமைச்சியல்
அரணியல்
பொருளியல்
படையியல்
நட்பியல்
குடியியல்

இந்த அமைப்பு முறை, பொருட்பாலில் வரும் முதல் அதிகாரத்தோடு பொருந்த வருகின்றது. இந்தப் பகுப்பே இன்று பெரிதும் பின்பற்றப்படுகின்றது.

மணக்குடவர் காமத்துப்பாலைப் பிரிக்கும் முறை

காமத்துப்ப்பால் இயல் பகுப்பில் உரையாசிரியர்களிடையே பெருத்த வேறுபாடு காணப்படுகின்றது. மணக்குடவர் காமத்துப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பகுத்து ஒவ்வோர் இயலுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாகக் கொண்டுள்ளார் என்பர். இதை,

காமத்துப்பால் கூறுவார் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணையும் முதல் கரு உரிப்பொருள் பற்றிப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரோ ஒரு நிலம் ஐந்து அதிகாரமாக இருபத்தைந்து அதிகாரத்தான் கூறி

என வரும் மணக்குடவர் கூற்றுவழி அறிய முடிகின்றது.

காலிங்கரும் பரிமேலழகரும் வேறு வகையில் காமத்துப்பாலின் இயல்களைப் பிரிக்கின்றனர்.

மணக்குடவர் அமைப்புப்படி இயலுக்குள் வரும் அதிகார வைப்பு முறை

திருக்குறளின் இயல்களில் வரும் அதிகார வைப்புகளிலும், அதிகார முறை வைப்புகளிலும் மணக்குடவர் போக்குக்கும் பிற பழைய உரையாசிரியர்களின் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன.

இனியவை கூறல்
அடக்கமுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை

ஆகிய ஐந்து அதிகாரங்களைத் துறவறவியலுள் முறையே 26, 27, 30, 31, 32 -ஆவது அதிகாரங்களாக மணக்குடவர் அமைத்துள்ளார்.

ஆனால், ஏனைய உரையாசிரியர்கள் இந்த அமைப்பு முறையை மாற்றி, இவற்றை இல்லறவியலில் முறையே 10, 13, 17, 18, 19 - ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

அதேபோல், மணக்குடவர் இல்லறவியலில் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை முறையே 10, 16, 17, 18, 19, 20 ஆம் அதிகாரங்களாக அமைத்திருக்க, ஏனைய உரையாசிரியர்கள் அவற்றை மாற்றி, துறவறவியலில் முறையே 30, 31, 32, 33, 26, 29 -ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

மணக்குடவர் ஆய்வின் பயன்

எனவே, திருக்குறளின் பால் பகுப்பில் (அறம், பொருள், காமம்) பழைய உரையாசிரியர்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பது தெளிவு. பால் பகுப்பைத் திருவள்ளுவரே செய்திருப்பார் என்று நம்ப இடமிருக்கிறது.

ஆனால், இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகிய இவற்றின் வைப்பு முறையில் பழைய உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். அதுபோலவே, அவர்களிடையே பாட வேறுபாடுகளும் பல காணப்படுகின்றன.

இதிலிருந்து, பிற்காலத்தில் திருக்குறளுக்கு முறை மாறிய உரைகள் எழுந்ததற்கு வித்திட்டவர்கள் பழைய உரையாசிரியர்களே என்பது தெளிவாகிறது.

மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)

திருக்குறள் பழைய உரைகளில் காலத்தால் முந்தியது மணக்குடவர் உரை. இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு. [1] வடமொழிக் கருத்தைப் புகுத்தாது தமிழ் முறைப்படி உரை எழுதியவர் என்று இவர் புகழப்படுகிறார்.[2]

உரைப்பாங்கு [3] https://ta.wikipedia.org/s/top

  • இவரது உரை திருக்குறளில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விளங்குமாறு எழுதப்பட்டுள்ளது.
  • அதிகாரங்களின் கருத்துரையாக 'அருளுடைமை வேண்டும்', 'நடுவுநிலைமை வேண்டும்' என்பது போன்ற தொடர்களைத் தருகிறார்.
  • அதிகாரத் தொகுப்புரை தருகிறார். 'கயமை' என்னும் அதிகாரத்துக்குத் தரப்பட்டுள்ள தொகுப்புரை இது.
உறுப்பு ஒத்துப் குணம் ஒவ்வாமையின் கயவர் மக்கள் அல்லர் ஆயினார். வேண்டியன செய்வார். தாம் அறியார். இயல்பான ஒழுக்கம் இலர். நிறை இலர். அடக்கம் இலர். அழுக்காறு உடையர். இரப்பார்க்குக் கொடார். ஒறுப்பார்க்குப் கொடுப்பர். நிலை இலர். - இவற்றில் ஒவ்வொரு குறளின் கருத்தும் இரண்டே சொற்களால் கூறப்பட்டுள்ளன.
  • 'மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்' என்னும் தொடரை இவர் தோழி கூற்று என்கிறார். [4] இதற்கு இவர் தரும் விளக்கம்
நும்மால் (தலைவனால்) காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ் வருத்தம் ஒக்கும். பெண்டிற்கு இப் பெண்மையாகிய மடல் ஏறாததே குறை என்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற் பொருட்டுத் தோழி கூறியது.
  • அதிகாரத்தில் உள்ள குறள்களின் கருத்தைச் தொகுத்துச் சுட்டுகிறார். 'ஒற்றாடல்' அதிகாரத்தில் இவர் தொகுத்துக் காட்டியவை.
இது ஒற்று வேண்டும் என்றது. இவை மூன்றும் ஒற்றிலக்கணம் கூறின. இவை இரண்டும் ஒற்று வேண்டுமிடம் கூறின. இவை இரண்டும் ஒற்றரை ஆளும் திறம் கூறின. இது பிறர் அறியாமல் சிறப்புச் செய்யவேண்டும் என்பது. இது ஒற்று இன்மையால் வரும் குற்றம் கூறியது.
  • இவர் கூறும் சில மருத்துவ வழக்காறுகள்
நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மில் அளவு ஒக்குமாயின் கொல்லும். [5]
பலாப்பழம் தின்று பின் சுக்குத் தின்றால் தன் உயிர்க்கு வரும் இடையூறுஇ இல்லை [6]
  • தெண்ணீர் அடுபுற்கை - மோரினும் காடியினுப் அடப்பெறாதும் தெளிந்த தீரினாலே அட்ட புற்கை [7]
  • மருந்து என்னும் அதிகாரத்தில் 'கற்றான்' என்பதற்கு ஆயுள் வேதம் கற்றான் என உரை எழுதியுள்ளார்.
  • இவர் காட்டியுள்ள புராணக் கதைகளில் சில
அருச்சுணன் தவம் மறந்து அல்லவை செய்தான்
வெகுளியால் நகுஷன் பெரும்பாம்பு ஆயினான்
நோற்றலால் மார்க்கண்டேயன் கூற்றத்தைத் [8] தப்பினான்.
ஐந்து அவித்தான் ஆற்றல் - இவ்வளவில் கண் மிக்க தவம் செய்வார் உளரானால் இந்திரன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்கும்.
  • உரையில் காணப்படும் சில அருஞ்சொற்கள்
அட்டாலம் = அட்டால மண்டபம்
நெத்தம் = கறவாடு பலகை

மேற்கோள்[தொகு]

  1.  மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 95.
  2.  தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
  3.  அதிகாரத்தில் குறள் வைக்கப்பட்டுள்ள வரிசைமுறை பிற்காலப் பரிமேலழகர் வைப்புமுறையிலிருந்து மாறுபட்டது என்னும் செய்தியை உள்ளத்தில் கொண்டு இவரது உரையை அணுகவேண்டும்
  4.  பரிமேலழகர் தலைவன் கூற்று என்கிறார்
  5.  திருக்குறள் 943
  6.  திருக்குறள் 944
  7.  செறிவு இன்றித் தெண்ணீர் போன்ற கூழ் என்றும், பசை பெறாப் புற்கை அன்றி வெறும் தெண்ணீர் புற்கை என்றும் பிறர் உரை கண்டுள்ளனர்
  8.  கூற்றத்தின் பிடியிலிருந்து

No comments:

Post a Comment