Sunday, June 24, 2018

மாணவர்களுக்குத் திருக்குறளை பயிற்றுவிக்க வேண்டும் -உயர்நீதிமன்ற தீர்ப்பு

உயர்நீதிமன்ற தீர்ப்பு



ஓர் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எந்த அளவுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை நீதியராயம் 2016-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நீதிபதி ஆர். மகாதேவன் அளித்தத் தீர்ப்பு உணர்த்துகிறது. அவரது அமர்விற்கு முன்னால் ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி ஆர். மகாதேவன் வழங்கிய தீர்ப்பு இப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக உலகளாவிய தமிழ் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் எஸ்.ராஜரத்தினம் என்பவர், இளைய சமுதாயத்திடம் குறைந்துவரும் ஒழுக்க சிந்தனைக்குத் தீர்வாக ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரையில் மாணவர்களுக்குத் திருக்குறளை அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலுள்ள அனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 2011-ஆம் ஆண்டில் வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 2,083 என்றும், அவற்றுள் 1, 170 பேர் தொடக்கக் கல்வி பயின்றவர்கள், 617 பேர் இடைநிலை கல்வி பயின்றவர்கள், 56 பேர் 12-ஆம் வகுப்புக்கு மேலான உயர்கல்வி படித்தவர்கள், 240 பேர் படிக்காதவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் தனது மனுவில் இணைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆர். மகாதேவன், திருக்குறளிலுள்ள 108 அதிகாரங்களை அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூடங்களில் தனிப் பாடமாக வைக்க வேண்டும் என்றும், அதை அரசினால் நியமிக்கப்பட்ட குழு தயாரிக்க வேண்டும் என்றும், மாநில அரசு அமைக்கும் அந்தக் குழு இந்திய அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, புதிய வரலாறு படைத்தார்.
வழக்கமாக உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் உடனயாக நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழக வரலாற்றில் இன்னொரு மிகப்பெரிய திருப்புமுனையாகத் தமிழக அரசு உடனடியாக நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முற்பட்டது என்பது மனுதாரரின் அக்கறையும் கவலையும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் காணப்படுகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பு மொரீஷியஸ் நாட்டில் எதிரொலித்தது. மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திருக்குறள் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அந்தத் தீர்ப்பை அப்படியே ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டார். இந்தக் கையேடு உலகிலுள்ள பல தமிழார்வலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கையேடு இப்போது ஐ.நா. சபையின் யுனெஸ்கோவையே திருக்குறள் குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது.
நாடு, மொழி, இனம், மதம், ஜாதி எனும் அடையாளங்களைக் கடந்த நூலாக இருந்து, வாழும் ஒவ்வொருவருக்கும் உலக நன்மைக்கும் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டிய நூலாக உலக வரலாற்றில் நீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்பட்ட திருக்குறள், விரைவிலேயே உலக நூலாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட இருக்கிறது எனும்போது, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் வீச்சு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.
அடுத்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்குறளைப் படித்தவர்களாக, குறைந்தபட்சம் ஒருமுறையாவது படித்தவர்களாக, உருவாகப் போகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சாதனை. இந்த சாதனைக்குக் காரணமான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜரத்தினம், நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, மொரீஷியஸ் சர்வதேச திருக்குறள் அமைப்பின் நிறுவனர் ஆறுமுகம் பரசுராமன் ஆகியோருக்குத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பு "திருக்குறள் : தீர்ப்பு தரும் தீர்வு' என்கிற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து திருக்குறளைப் பள்ளிக் கல்விப் பாடத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு ஆணையிட்டு அளித்த, தீர்ப்பும், தீர்ப்பின் மீதான புரிதல்களையும் உள்ளடக்கியது இந்நூல். இதன் பதிப்பாசிரியர் நல்லூர் சா.சரவணன்.

No comments:

Post a Comment