Friday, June 15, 2018

திருக்குறள் கற்க அற்புதமான திரு. கோ. வடிவேல் செட்டியார் உரை

-வள்ளுவம்வழி கிருஷ்ணன் (tamilarpage@yahoo.com)
 

  திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் காலந்தோறும் தோன்றினாலும், பரிமேலழகர் உரையே திருக்குறளின் பெருமையை உயர்த்த உதவிய உரை.  பரிமேலழகரின் உரையும் இன்றைய காலத்தில் எளிதில் புரிவதில்லை.  கோ. வடிவேல் செட்டியார். இவர்  திருக்குறளுக்கு வழங்கியுள்ள தெளிபொருள் விளக்கம், கருத்துரை, குறிப்புரை ஆகியவை தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது - பின்பற்றப்பட்டிருக்கிறது. 
 இவரது தெளிபொருள் விளக்க நூலைத் தேடி எடுத்து, "சிவாலயம்' ஜெ.மோகன் என்பவர் பதிப்பித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியிருக்கிறார். 
இணையத்தில் PDFஆகவும் கிடைக்கிறது- reply me at tamilarpage@yahoo.com
http://books.dinamalar.com/details.asp?id=24083
 திருக்குறளுக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்களில், பரிமேலழகரே மிகுந்த சிறப்புடையவர் என்பது, அவரைத் திட்டுகின்றவர்களும் சேர்ந்து சொல்லுகின்ற முடிபாகும். ‘வடநூல் துறையும் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன்’ எனப் பாராட்டப் பெறுபவர் அவர். மூலநூலாசிரியராகிய திருவள்ளுவரோடு சேர்த்து வைத்துக் கொண்டாடும் அளவுக்குச் சிறப்புப் பெற்றவர்.
கடந்த, 19ம் நூற்றாண்டு வரை இவ்வாறு பாராட்டும் புகழும் பெற்று விளங்கிய பரிமேலழகர், 20ம் நூற்றாண்டு இருபதுகள் தொடங்கி, பல்வேறு நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளாகி வருகிறார்.
திருக்குறள் உரையுலகில், பரிமேலழகரை இவ்வாறு அடையாளப்படுத்தும் இன்றையச் சூழலில், அவரை திருவள்ளுவரோடு ஒப்பவைத்து தெய்வமாகப் போற்றும் மகாவித்துவான் கோ.வடிவேலு செட்டியாரின் பரிமேலழகர் உரைக்கான தெளிபொருள் விளக்கம், கருத்துரை, குறிப்புரை ஆகியவற்றை, லாபநோக்கு இல்லாமல், துணிந்து மிகுந்த பொருட்செலவில் மிக நேரிய முறையில், அழகாக இரண்டு பாகங்களாக வெளியிட்டு வழங்கியுள்ள, சிவாலயம் ஜெ.மோகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பரிமேலழகரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பவர்கட்கு இந்தப் பதிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. பரிமேலழகர் உரை தருக்கம், இலக்கணம், சாங்கியம், யோகம், வேதாந்தம், தருமசாஸ்திரம், வடமொழி நூல்கள், தமிழ் நூல்கள் ஆகியவற்றின் கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றது. இவற்றின் செய்தி அறிந்தார்க்கே பரிமேலழகர் உரை புரியும். செட்டியார், தமது உரைக்கு ஏறக்குறைய, 95 நூல்களைச் சான்றாகக் கொண்டு உள்ளார். மநுநீதியை, 31 இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். இவர்காட்டும் நூற்பரப்பு, நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. இவற்றையெல்லாம் அறிந்திருந்த  காரணத்தால் தான், இவரால் பரிமேலழகரைப் புரிந்து கொண்டு, உரை சொல்ல முடிந்தது எனலாம். 
செட்டியார்தம் நூலில் திருக்குறளுக்குப் பரிமேலழகர் நல்கிய உரைக்குத் தெளிவான பொருள் விளக்கம் உள்ளது; கருத்துரை உள்ளது; பரிமேலழகர் உரையில் எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் நுண்பொருள்களுக்குக் குறிப்புரை என்ற வகையில் சிறந்த விளக்கம் உள்ளது; பரிமேலழகர் மேற்கோளாகக் காட்டியுள்ள செய்யுள்களுக்கு உரை உள்ளது; செட்டியார் தாமே காட்டும் செய்யுள்களும் உள்ளன; பரிமேலழகர் தமக்கே உரிய வகையில் தந்த இலக்கணக் குறிப்புகட்கு விளக்கம் உள்ளது; பலசமயக் கோட்பாடுகள் பற்றிய விளக்கம் உள்ளது; மேற்கோள் காட்டப்பட்டுள்ள செய்யுட்களின் நூற்பெயர்கள் உள்ளன; பாடவேறுபாடுகள் எடுத்துக் காட்டப்பட்டுத் தக்க பாடம் இது எனச் சொல்லப்பட்டுள்ளது; பரிமேலழகர் கூறும் மறுப்புகள் குறித்த விளக்கமும் தரப்பட்டுள்ளது. 
இதுபற்றியே டாக்டர் மு.வரதராசனார், ‘மணக்குடவர், பரிமேலழகர் முதலானவர்களுடன் சேர்த்துப் போற்றத் தக்க பெருமை உடையவர் பேராசிரியர் கோ.வடிவேலு செட்டியார்’ எனக் குறிப்பிடுகின்றார். குறளுக்கான உரையையும் (பொருளையும்) அந்தக் குறளுக்கான விசேட உரையையும் (விளக்கம்), பரிமேலழகர், பொழிப்புரையாகவும் தொடர்களாகவும் எழுதிச் செல்கிறார்.
சான்றுக்கு ஒரு குறள்: (பக்: 83, 84, 85)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (26)
இந்தக் குறளுக்கான பரிமேலழகரின் பொழிப்புரை: ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கெளியவற்றைச் செய்யாது, அரியவற்றைச் செய்வார் பெரியர், அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். பரிமேலழகரின் நீண்ட தொடர்களாகிய இந்தப் பொழிப்பைப் பதங்களாகப் பிரித்து, நாம் புரிந்து கொள்ளும்படி எளிமையான சொற்களைக் கொண்டு தெளிய வைக்கிறார் செட்டியார். இதனையே தெளிபொருள் விளக்கம் எனச் செட்டியார் குறிப்பிடுகிறார். எப்படி என்பதைப் பார்ப்போம்.
(ஒத்த பிறப்பினராகிய மனிதர்களுள்) பெரியர் – பெரியோர், செயற்கரிய – (செய்வதற்கு எளிமையானவற்றைச் செய்யாமல்) செய்வதற்கு அருமையானவற்றை, செய்வார் – செய்வர், சிறியர் – சிறியோர், செயற்கரிய (அவ்வெளிமையானவற்றைச் செய்து) செய்வதற்கு அருமையானவற்றை, செய்கலாதார் – செய்யமாட்டாதார்.
இவ்வாறு செட்டியார் பதவுரை சொல்கிறார். 
குறளுக்கான பதங்கட்கு (சொற்கட்கு) பொருள் சொல்லாமல், பரிமேலழகரின் பொழிப்பில் உள்ள பதங்கட்குப் பொருள் சொல்வதே, செட்டியார் பணி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தக் குறளுக்குரிய பரிமேலழகரின் விசேட உரை: செய்தற்கெளியவாவன – மனம் வேண்டியவாறே அதனைப் பொறிவழிகளாற் புலன்களில் செலுத்தலும் வெஃகலும் வெகுடலும் முதலாயின. செயற்கரியவாவன – இயம நியம முதலாய எண்வகை யோகவுறுப்புக்கள். நீர்பலகால் மூழ்கல் முதலாய நாலிருவழக்கிற்றாபத பக்கமென்பாரும் உளர். அவை நியமத்துள்ளே அடங்கலின் நீத்தாரது பெருமைக்கேலாமை அறிக.
இதற்குச் செட்டியாரின் தெளிவுரை: செய்தற்கெளிமையாவன – மனம் விரும்பிய படியே அதனை (கண் முதலிய) இந்திரிய வாயிலாக விடயங்களில் செலுத்தலும் விரும்புதலும் கோபித்தலும் முதலியனவாம். செய்தற்கருமையாவன – இயமம் நியமம் முதலான யோகங்களாம்.
பரிமேலழகரின் பொழிப்புரையிலும் விசேடவுரையிலும் சொல்லப்படும் செய்தி களில், நமக்கு விளங்காதவற்றை எடுத்து விளக்கமாகச் சொல்லும் பகுதியைக் குறிப்புரை எனச் செட்டியார் குறிப்பிடுகிறார். நியாயமாக இந்தக் குறிப்புரையைத் தான் ‘தெளிபொருள் விளக்கம்’ எனச் சொல்ல வேண்டும். செட்டியாரின் பரந்துபட்ட நூலறிவும், நுண்மாண் நுழைபுலமும், இந்தக் குறிப்புரையில் தான்  விளங்கித் தோன்றுகின்றன.
இந்தக் குறளின் விசேடவுரையில், எண்வகை யோக உறுப்புக்கள் பற்றிப் பரிமேலழகர் குறிப்பிடுகிறார். இவை பற்றித் தம் குறிப்புரையில், ‘எண் வகை யோகவுறுப்புக்கள் – யோகத்திற்குரிய எண்வகை அங்கங்கள். அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன’ என எழுதி, இந்த எட்டையும் மிக விளக்கமாக செட்டியார் எழுதியுள்ளார். மேலும், ‘இவற்றின் விரிவை அடயோகப் பிரதீபிகை முதலியவற்றிற் காண்க’ எனச் செட்டியார் குறிப்பிடுவதில் இருந்து, யோகநூல்களைச் செட்டியார் படித்து தெளிந்தவர் என்பது தெளிவாகிறது.
மேலும், பரிமேலழகர் தமது விசேடவுரையில், ‘நீர்பலகால் மூழ்கல் முதலாய நாலிருவழக்கின் தாபதபக்கம் என்பாரும் உளர்’ என எழுதியுள்ளார். இது பலருக்குப் புரியாத பகுதி. இதனை செட்டியார், ‘நீர்பலகால் மூழ்கல் முதலாய நாலிருவழக்கின் தாபதபக்கம் என்பதற்கு நீரின்கண் பலமுறை மூழ்கலும், வெறுநிலத்து உறங்கலும், மான்தோலை ஆடையாகத் தரித்தலும், சடை தரித்தலும், எரியோம்புதலும், ஊரடையாமையும், கானகத்துண்டலும், கடவுளைப் போற்றலும் என்னும் எண்வகை மார்க்கத்துத் தவம்புரியும் கூறு என்று கொள்க’ என விளக்கியதுடன், இதுதொடர்பான புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியுள்ள பாடலையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
மேலும், ‘அவை நியமத்துள்ளே அடங்கலின் நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக’ எனப் பரிமேலழகர் தம் விசேடவுரையில் சொல்லியுள்ள மறுப்பினை விளக்க, ‘நியமம் – தவம், சவுசம் (உடலை நீரினாலும் மனதைச் சத்தியத்தினாலும் தூய்மையாக்கல்) தத்துவ நூலாராய்ச்சி, பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வ வழிபாடு என்னும் ஐந்துமாம்’ என எழுதி, அந்த எட்டும் நியமத்துள்ளே அடங்குவதைக் குறிப்பிட்டு விளக்குகிறார்.
இப்படியாகப் பலவகையிலும் பரிமேலழகரை புரிந்து கொள்ள உதவும் செட்டியார் உரையும், சில இடங்களில் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது என்பதும் உண்மையே. அந்தந்த இடத்திற்கான தக்க கல்வி உடையார்க்கே அதுவிளங்கும். ஆனால், இக்காலத்தில் அத்தகையக் கல்வி இல்லையே!  தருக்கம், யோகம், மீமாம்சம், சாங்கியம், தருமசாஸ்திரம் முதலானவற்றைத் தமிழ் படிப்போர், படிப்பதில்லை; பாடத்திட்டத்திலும் அவை இல்லை; தனியாகச் சென்று படிப்பதற்கும் இடமில்லை. இத்தகையக் கல்வி இல்லாததால், செட்டியார் உரையும் சில இடங்களில் புரியாமல் போகிறது.
ஐம்பது ஆண்டுகட்கு முன்பு, புலவர் கல்லூரி மாணவர்கட்கு நான் பரிமேலழகரைப் பாடம் சொல்லிய காலத்தில், நமது செட்டியார் உரையே கலங்கரை விளக்குப்போல நின்று எனக்கு வழிகாட்டியது. அவர் உரை கிடைக்காத காலத்தில் நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும். உரை கிடைத்தபின்பு, நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அப்போது மானசீகமாக நான் செட்டியாருக்குச் செலுத்திய நன்றிக்கு அளவில்லை.
செட்டியார் அவர்களின் தலைமாணவராகவும், முதல் மாணவராகவும் விளங்கிய பல்கலைச் செல்வர் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, செட்டியார் உரையின் அறத்துப்பாலை வெளியிட்டார். அவருக்கு முன்பாக, 1904 மற்றும் 1919ம் ஆண்டுகளில் இரு பதிப்புகளைக் கண்டுள்ளது இந்த நூல்.
தற்போது சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் மூன்று பால்களையும் பிழையேதும் இல்லாமல், குறை சொல்ல முடியாத அளவில் அச்சிலும் அமைப்பிலும் அழகூட்டி, திருவள்ளுவரின் உருவப்படத்தையும் அட்டையில் அமைத்து அருமையாக வெளியிட்டுள்ளார். 
தொடர்புக்கு: samithiagarajan08@gmail.com

 – பேரா.சாமி.தியாகராசன்
இந்நூலைப் பெற ...
திரு ஜெ.மோகன் அவர்களைத் தொடர்புகொள்ள.

சிவாலயம் 
14-4, G.S. பிளாட்ஸ்,
3-ஆவது மாடி, இரண்டாவது தெரு,
கிழக்கு அபிராமபுரம்,
மயிலாப்பூர், சென்னை-4 
தொ.பே. 044-24987945

No comments:

Post a Comment