Sunday, July 29, 2018

இயல்புடைய மூவர்

 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை                            (குறள்  41; இல்வாழ்க்கை )
இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும்   நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான்

நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார்,

 இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன்,   நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக்  பிரித்துக்  குறிக்கவில்லை என்பது தெளிவு, இதை விளக்க அடுத்த குறளைப் படித்தால் போதும் - (துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்  இல்வாழ்வான் என்பான் துணை), அடுத்த குறள் - ஐம்புலத்தார் ஓம்பல் எனக் கூறுகையில் குடும்பத்தை ஒக்கல் என நான்காவதாய் அனைத்து குடும்ப உறுப்பினரையும் போட்டு விட்டார்.

வள்ளுவர் இல்வாழ்வை இல்லறம் என்ற சொல்லை குறளில் சொல்லவே   இல்லை., நல்லாறு என்பது சமுதாயக் கடமை தான். திருவள்ளுவர் இந்திய தத்துவ ஞான மரபு வழியினர், எனவே அறிவு சார்பு வழியினர்,  அவர் இங்கு இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மணக்குடவர் உரை திருவள்ளுவர் குறள் எழுதி 100 ஆண்டுக்குள் எழுதப் பட்டது - சமணர் உரை.

 நாம் மேலே பார்த்ததில் சமணர் உரை பார்த்தோம், பரிமேலழகருக்கு முந்தைய மற்ற உரை பரிபெருமாள் மற்றும் பருதியார் உரை அதையும் பார்ப்போம்



குறள் காலத்தில் வாழ்வை மாணவப் பருவம்(பிரம்மச்சார்யம்), குடும்ப வாழ்க்கை (க்ருஹஸ்தன்), துறவிகள் (சந்நியாசிகள்) மற்றும் மனத்தளவில் குடும்ப வாழ்க்கையை துறந்து ஒதுங்கி வானப்ரஸ்த நிலை வாழ்க்கை(வானப்ரஸ்தம்) எனப் பிரித்ததில்; குடும்ப வாழ்பவன் மற்ற மூவரையும் காத்தல் என உரையாசிரியர்கள் என அனைத்து பழைய உரைகள்  சமணர் உரை உட்பட கூறினர்.

திருவள்ளுவர் மிகத் தெளிவாய் ஒருவர் இவ்வுலகில் வாழ்வது எளியோர்க்கு உதவி புகழ் பெறவே என்பார். 

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.          குறள் 231:  புகழ்
எளியோர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

இல்வாழ்வில் உள்ளோர் முதல் கடமை  செய்யும் தகுதியை கணவர் கோவலான் கொலையால் இழந்தேன் என கண்ணகி புலம்புவாள். 
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
                                         6. கொலைக்களக் காதை -சிலப்பதிகாரம்

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.

மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
                                 - திரு வி க, வ சுப மாணிக்கம், இரா சாரங்கபாணி, குழந்தை
இளையர், முதியோர், பெண்கள் - ச தண்டபாணி தேசிகர்
உறவினர், நண்பர், ஏழைகள் நாமக்கல் இராமலிங்கம்.
பார்ப்பான், அரசன், வணிகன் தேவநேயப் பாவாணர்
சைவர், வைணவர், வைதிகர் 
அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் - மு கோவிந்தசாமி
 அறவோர், நீத்தார்,  அந்தணர் - கா அப்பாத்துரை
மாணவர், தொண்டர், அறிவர் - சி இலக்குவனார்
தாய், தந்தை, தாரம்           வ உ சிதம்பரம், இரா இளங்குமரன்

பெற்றோர், துணைவி, மக்கள் 
                          - கு ச ஆனந்தன், நெடுஞ்செழியன், கலைஞர், சுஜாதா.
கல்வி நிலை, மனைத் தவநிலை, துறவுநிலை நிற்பார் -கா சு பிள்ளை

குடும்பத்தாரைப் பிரித்து தாய், தந்தை, மனைவி, மகன் என்றெல்லாம் பிரிப்பதோ, தொடர்பற்று ஜாதிகளை திணிக்கும் கிறிஸ்துவ வெறி தேவநேயர் உரைகளோ வள்ளுவர் உள்ளம் இல்லை.

தமிழர் மெய்யியல் மரபு, வேதங்கள், இறை வணக்கம் என்பதை மாற்ற எத்தனை பாடுபடல்- எல்லாருமே  கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.







Saturday, July 28, 2018

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  
செய்தொழில் வேற்றுமை யான்.             (குறள் 972: பெருமை)                            பிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான்
எல்லா உயிர்க்கும் – யாவர்க்கும்
சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது
செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள
வேற்றுமையான் – வேற்றுமைகளால்
எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது .
யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –( கணியன் பூங்குன்றனார்) எனும் கோட்பாடு படி  ஒருவன் செய்யும் செயல் அதில் உள்ள அறத்தின் பலன்(புண்ணியமே) உன் நிலையை தீர்மானிக்கும். வள்ளுவர் நீ இப்பிறவியில் செய்யும் அறத்தின் பயன் உன் அடுத்து எழும் பிறவிகளில் நல்லது செய்யும் என்பார்.

 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.             குறள்.36 அறன்வலியுறுத்தல்
பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழிந்த பின்பும் மறுமையில் அழியா துணையாகும்.

வள்ளுவர் ஒரு அரசன் தன் நாட்டை ஆளும் செங்கோல் பிராமணர்களின் வேதங்கள் மற்றும் அறநூல்களுக்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் என்பார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.                குறள்.543   செங்கோன்மை
நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள்- அறநூல்களை மறப்பர்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.             குறள் 560  கொடுங்கோன்மை
ஒரு பெரும் சமுதாயத்தில் பணிக்கு ஏற்ப சட்டங்கள் அமையும்,  அஹிம்சையையும், புலால் மறுத்தலையும் போற்றி துறவரவியலில் கூறிய வள்ளுவர்.

சட்டம் - ஒழுக்கு என வருகையில் அது அவரவர் தொழில், தன்மைக்கு ஏற்ப மாறும் இதை நாம் திருக்குறளிலேயே காணலாம். அஹிம்சை, புலால் மறுத்தலை வலியுறுத்தும் வள்ளுவர் கொடியோரை (பாழ் செய்யும் உட்பகை இல்லாதபடிக்கு) - வயலைல் களை பிடுங்க் எரிதல் போலே மொழி - இனம் எனப் பிரிவினை தூண்டும் கொடியோரை வேரோடு அழிக்க வேணும் என்பார்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.                 செங்கோன்மை குறள் 550
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.                      ஒற்றாடல்  குறள் 582
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்                    ஒழுக்கமுடைமை குறள் 134:
பிராமணன் தினமும் கூறும் வேதங்களை மறந்தாலும் மீண்டும் நினைவில் கொணரலாம், ஆனால்  தன் குடிப்பிறப்பு  ஆசாரத்தில்  குன்றினால் கெடு்ம்.

தமிழருள் பகைமூட்ட கிறிஸ்துவ நச்சுப் பரப்பல் செய்த தேவநேயப் பாவாணனைப் போலும், காலனி ஆதிக்க சர்ச் அடிமைகள் தமிழை காட்டிமிராண்டி எனப் பழித்த ஈ.வெ.ராமாசாமி வழி தமிழின் எதிரிகளும்
அற நூல் எழுதிய வள்ளுவரை வைத்து - இந்தக் குறள் மூலம் தமிழர் மெய்யியல் மரபை நிராகரிக்கிறார் என பிதற்றுவர்.

பொய்யான உரைகள்.
 சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான்.    என்பதை செய்யும் தொழிலால் வரும் வேறுபாட்டு சிறப்புகளும் பொருந்தாது என கதைக்கின்றனர்.

சிறப்பு ஒவ்வா உள்ள ஒவ்வா வேறோர் குறளிலும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண் ஒவ்வேம் என்று.                   குறள் 1114:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். 

 ஒவ்வாக-  ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா
சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான் -   செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
வள்ளுவர் மிகத் தெளிவய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.               குறள் 528    சுற்றந்தழால்
 அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யோரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-
.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.          குறள் 508:  தெரிந்துதெளிதல்
ஒருவரை  ஆராய்ந்து பார்க்காமல்  துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு.          குறள் 452:  சிற்றினஞ்சேராமை
 நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்
 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு 
இனநலம் ஏமாப் புடைத்து.        சிற்றினஞ்சேராமை குறள் 458
நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும்  நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை அமையும் 

கிறிஸ்துவ மதமாற்ற வேசித்தனத்தால் தமிழரை ஆரியர் - திராவிடர் என பொய்யான மோசடி நச்சு பரப்புவோரோடு பழகும் தமிழறிஞர்கள் வள்ளுவத்தினை சிதைக்கும் உரை தவறான கூட்டு தான். 
நச்சு கிறிஸ்துவமும், தமிழை காட்டு மிராண்டி பாஷை; தமிழை அழிக்கவே திராவிடம் என சொல்லியோர் கூட்டத்தில் இணைவோர் திருக்குறளை இழிவு செய்கின்றனர்.

Monday, July 23, 2018

தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை              ( 43  இல்வாழ்க்கை)

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.




பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.

தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் பாடல் எளிதாய் விளக்கும்.
 
 புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் 
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் 
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் 
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் 
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......   (புறம்-9)  
                -   அக்காலத்  போர் நெறி காட்டும்.
போரிற்காய் நுழையும் அரசன் ஊரை வளைத்த உடன் - அந்த ஊரில் உள்ள  ஆனினம், அவ்வியல்புடைய பார்ப்பன மக்கள். பெண்டிர், பிணி உடையவர், இறந்த பின்னர் பித்ரு காரியம் தொடர்ந்து செய்ய வேண்டிய புதல்வர்ப் பெறாதோர் இவரகளை பத்திரமாக காக்கும்படி செய்வர். இவ்வாறு அறவழி நடக்கும் இயல்பும், துணிவும் உடையவனான எம் குடுமியே என மன்னர்

 நம் உயிரை எடுப்பவர் கூற்றுவன் (எமன்) எனப் பெயர், சிவபெருமான் கூறும்படி காலம் முடிந்தபின் உயிர் எடுப்பதால்;  வள்ளுவரும் மரணம் குறித்து -  கூற்றத்தை (குறள்-894)  கூற்றமோ (1085) கூற்று (326,765, 1083) கூற்றம் (269) எனப் பல குறள்களில் கூறி உள்ளார்.

முன்னோர் கடன் என்பது இறந்த உடன் சில தான-தர்மங்களும், பிண்டமிடல் போன்றவையும், பின் மாதா-மாதம் அமாவாசை அன்றும், மாதம் முதல் நாட்களிலும் மிகுந்த ஆசாரமுள்ளோரும், மற்றவர்கள் முக்கியமான நீர்நிலைகளில் முழுக்கிடுதலும் மரபு. வருடா வருடம் திதி தருதல்.

இந்த திதி நாட்களில் கோவிலிற்கு செல்லவும் கூடாது என்பர், அதாவது கடவுளிற்கு முன் தென்புலத்தார் கடன் - வள்ளுவரும் முதலில் அதை வைத்தார்.


தற்கால புலவர்களின் கயமை உரைகள்.
திருக்குறளிற்கு முதல் உரை மணக்குடவர் எனும் சமணர்; சமணத்தில் ப்த்ரு கடன் கிடையாது, ஆயினும் அவர் அதை அப்படியே கூறி உள்ளார்.

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.


 சாலை இளந்திரையன் - தென்னிலப் பகுதிகளில் உள்ளவர் 
 இலக்குவனார் -தென்னாட்டவர்
  இளங்குமரன் -தெளிந்த அறிவினர் 
குழந்தை - தென்னாட்டவர்
 வளன் அரசு (ஜோசப் ராஜ்) -வாழ்ந்து மறைந்தோர்
  க.ப.அறவாணன்- அரிய பெரிய வாழ்வு வாழ்ந்து மறைந்தோர் 

 தமிழர் மரபை ஏற்காது கிறிஸ்துவ நச்சுக் கருத்தின் அடிமைகளாய் எழுதப்பட்ட உரைகள்.  

Friday, June 29, 2018

திருக்குறள் மணக்குடவர் உரை

திருக்குறள் 800 வாக்கில் பெரும்பாலும் 9ம் நூறாண்டின் ஆரம்பத்தை சேர்ந்தது, திருக்குறள் எழுந்த அடுத்த நூறாண்டில் எழுந்த உதல் தமிழ் உரை. மணக்குடவர் ஜைனர்.

திருவள்ளுவர் - வேதங்களைப் போற்றி நாட்டின் அரசன் ஆட்சியின் செங்கோல் வேத - தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையாய் விளங்க வேண்டும் என்கிறார். அதே அரசன் கொடுங்கோலனாய் இருந்தால் பசுக்கள் பால் தராது, அந்தணர் வேதங்களை மறப்பர் என்கிறார்.

 உரையாசிரியர்களுள் காலத்தால் முதன்மையானது, வள்ளுவர் குறள் எழுதி 100- 150 ஆண்டிற்குள் எழுதப் பட்ட உரை. இதன் ஆசிரியர் ஒரு சமணர், ஆயினும் அவர் உரையின் சில முக்கிய குறள்களைப் பார்ப்போம்.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                    குறள் 134: ஒழுக்கமுடைமை


மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                  குறள் 543:        செங்கோன்மை


மணக்குடவர் உரை:
அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
 பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.) .


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.                             குறள் 560:          கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை:
பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.).

சமணர் மணக்குடவரும் திருவள்ளுவர் நல்ல நாடு செயல் பாட்டிற்கு வேதங்களே அடிப்படை எனத் தான் பொருள் கொண்டுள்ளார்.

ரிமேலழகர் உரையை வைதீக சார்பானது என்போர் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவில்லை, அல்லது கிறிஸ்துவக் காலனி ஆத்க்கம் பரப்பிய பொய்களின் அடிமை , தமிழர் மெய்யியலின் பகைவர்கள் என்பது தெளிவாகும்










திருக்குறள் பரிப்பெருமாள் உரை

திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை

 பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு எனத் தெளிவாகத் தெரிகிறது. இவரது உரை மணக்குடவர் உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. எனவே மணக்குடவர் காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பதாகிறது. ஏனைய மூவர் உரைகளைக் காலிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் எனக் கால வரிசைப்படுத்தலாம். பரிதியார் உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.









திருக்குறள் (ஜைன உரை

திருக்குறள் (ஜைன உரை









Sunday, June 24, 2018

மாணவர்களுக்குத் திருக்குறளை பயிற்றுவிக்க வேண்டும் -உயர்நீதிமன்ற தீர்ப்பு

உயர்நீதிமன்ற தீர்ப்பு



ஓர் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எந்த அளவுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை நீதியராயம் 2016-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நீதிபதி ஆர். மகாதேவன் அளித்தத் தீர்ப்பு உணர்த்துகிறது. அவரது அமர்விற்கு முன்னால் ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி ஆர். மகாதேவன் வழங்கிய தீர்ப்பு இப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக உலகளாவிய தமிழ் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் எஸ்.ராஜரத்தினம் என்பவர், இளைய சமுதாயத்திடம் குறைந்துவரும் ஒழுக்க சிந்தனைக்குத் தீர்வாக ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரையில் மாணவர்களுக்குத் திருக்குறளை அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலுள்ள அனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 2011-ஆம் ஆண்டில் வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 2,083 என்றும், அவற்றுள் 1, 170 பேர் தொடக்கக் கல்வி பயின்றவர்கள், 617 பேர் இடைநிலை கல்வி பயின்றவர்கள், 56 பேர் 12-ஆம் வகுப்புக்கு மேலான உயர்கல்வி படித்தவர்கள், 240 பேர் படிக்காதவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் தனது மனுவில் இணைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆர். மகாதேவன், திருக்குறளிலுள்ள 108 அதிகாரங்களை அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூடங்களில் தனிப் பாடமாக வைக்க வேண்டும் என்றும், அதை அரசினால் நியமிக்கப்பட்ட குழு தயாரிக்க வேண்டும் என்றும், மாநில அரசு அமைக்கும் அந்தக் குழு இந்திய அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, புதிய வரலாறு படைத்தார்.
வழக்கமாக உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் உடனயாக நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழக வரலாற்றில் இன்னொரு மிகப்பெரிய திருப்புமுனையாகத் தமிழக அரசு உடனடியாக நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முற்பட்டது என்பது மனுதாரரின் அக்கறையும் கவலையும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் காணப்படுகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பு மொரீஷியஸ் நாட்டில் எதிரொலித்தது. மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திருக்குறள் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அந்தத் தீர்ப்பை அப்படியே ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டார். இந்தக் கையேடு உலகிலுள்ள பல தமிழார்வலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கையேடு இப்போது ஐ.நா. சபையின் யுனெஸ்கோவையே திருக்குறள் குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது.
நாடு, மொழி, இனம், மதம், ஜாதி எனும் அடையாளங்களைக் கடந்த நூலாக இருந்து, வாழும் ஒவ்வொருவருக்கும் உலக நன்மைக்கும் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டிய நூலாக உலக வரலாற்றில் நீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்பட்ட திருக்குறள், விரைவிலேயே உலக நூலாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட இருக்கிறது எனும்போது, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் வீச்சு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.
அடுத்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்குறளைப் படித்தவர்களாக, குறைந்தபட்சம் ஒருமுறையாவது படித்தவர்களாக, உருவாகப் போகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சாதனை. இந்த சாதனைக்குக் காரணமான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜரத்தினம், நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, மொரீஷியஸ் சர்வதேச திருக்குறள் அமைப்பின் நிறுவனர் ஆறுமுகம் பரசுராமன் ஆகியோருக்குத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பு "திருக்குறள் : தீர்ப்பு தரும் தீர்வு' என்கிற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து திருக்குறளைப் பள்ளிக் கல்விப் பாடத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு ஆணையிட்டு அளித்த, தீர்ப்பும், தீர்ப்பின் மீதான புரிதல்களையும் உள்ளடக்கியது இந்நூல். இதன் பதிப்பாசிரியர் நல்லூர் சா.சரவணன்.

திருவள்ளுவர் காலம் - பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை காலம்

திருவள்ளுவர் காலம் - பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை காலம்